பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM1
திருமங்கை மன்னன் - திருவல்லிக்கேணி
949@..
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2
பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன் ! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும்புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாக பெரியோர் கூறுவர்.
********************************
953@..
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6
ஆழ்வார், பக்திப் பேருவகையில், பெருமான் மேல் கொண்ட பேரன்பில் அருளிய இப்பாசுரத்திற்கு, அந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வண்ணம் பொருள் கூறுவது சிரமமே ! முயற்சிக்கிறேன் !
என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
********************************
966@
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9
பரமபுருஷனான எம்பெருமான், அவனது ஆயிரம் நாமங்களை பொருள் உணர்ந்து ஓதிய அடியார்களின் (முற்பிறவியின்)பாவங்களை களைந்து, துன்பம் எதுவும் அவரை நெருங்காதபடி ரட்சித்து, அவ்வடியார்கள் தன்னை வந்தடைவதற்கு அருள் செய்யும் பேரருளாளன். தாதுக்கள் நிறைந்த, எழில் மிக்க, சிவந்த அசோக மலர்களை, தீப்பந்துகள் என்று பேதமையில் எண்ணி அஞ்சி விலகும் வண்டுகள் வாழும், இமயத்துச் சாரலில் அமைந்த, திருப்பிரிதியின் நாயகனான அப்பிரானை வணங்கி, அவனைப் பற்றிடு என் நெஞ்சமே !
********************************
978@..
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1
ஒரு சமயம், வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவனும் ஆவான் என் தலைவன். அந்த ஒப்பிலாத பெருமானே கங்கைக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்புண்ணியத் தலத்தில், தேவலோகச் சோலைகளில் மலர்ந்து நறுமணம் வீசும், பூஜைக்கு உகந்த, அழகிய கற்பக மலர்களை வானவர்கள் பறித்து வந்து, அவன் திருவடியில் வைத்து வணங்குகின்றனர் !
*****************************
984@
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7
ஐராவதம் என்ற வெண்யானையையும், பாற்கடலை கடைந்தபோது உண்டான அமுதத்தையும், தேவலோகத்தையும், அதை அரசாளும் உரிமையையும் இந்திரனுக்கு அருளிய எம்பெருமானே, வேண்டுவனவற்றை எமக்கு உகந்து வழங்கும் என் அப்பன் ஆனவன் ! ஆயிரம் முகங்கள் கொண்டு அடியார்களுக்கும் வானவர்க்கும் அருள் வழங்கும் அக்கருணை வள்ளலே, இமயத்துச் சாரலில் உள்ள மந்திரமலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதிக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான் !
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 266 ***
9 மறுமொழிகள்:
test !
பதிவுக்கு நன்றி...
அருமையான பாசுரங்கள் பாலா. திருவாய்மொழியைப் படிக்கும் போது தோன்றும் உணர்வுகள் கலியன் பாசுரங்களுக்கும் தோன்றும் என்று பெரியோர் சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். இந்தப் பாசுரங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் இப்போது படிக்கும் போது அந்த உணர்வுகளை உணர்ந்தேன்.
தூவிசேரன்னம் துணையொடு புணரும் என்ற சொற்றொடர் தாயாரையும் பெருமாளையும் குறிப்பதாகப் பெரியோர் சொல்வதைப் படித்திருக்கிறேன். ஜோடி அன்னங்கள் நீந்திச் செல்லும் போது அவற்றிடையே தாமரைக் காம்பு வந்தாலும் அந்த சிறிது நேரப் பிரிவையும் அவை தாங்கி கொள்ளாதாம். அப்படி எப்போதும் இணைந்து இருப்பவைகளை அகலகில்லேன் இறையும் என்று இருக்கும் அலர்மேல் மங்கைக்கும் உறை மார்பனுக்கும் சொல்வது மிகப் பொருத்தம்.
சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும் விதமும் பாசுரங்களுக்கு நீங்கள் பொருள் சொல்லியிருக்கும் விதமும் மிக அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.
என் தமிழ் சார்ந்த முயற்சிகளுக்கு உருவம் கொடுக்க இந்த வலைப்பதிவு பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்!UNQUOTE
ஆழ்வார்கள் பண்ணிலே தமிழை வள்ர்த்த
காலம் திரும்புகின்றது உங்களைப்போன்றவர்களால்
அன்புடன்
ராகவன்
என் தமிழ் சார்ந்த முயற்சிகளுக்கு உருவம் கொடுக்க இந்த வலைப்பதிவு பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்!UNQUOTE
ஆழ்வார்கள் பண்ணிலே தமிழை வள்ர்த்த
காலம் திரும்புகின்றது உங்களைப்போன்றவர்களால்
அன்புடன்
ராகவன்
பாலா,
அன்றே கண்டேன்! அல்லிக்கேணி அலங்கார ஆழ்வாரை!
ஏனோ பின்னூட்ட முடியாமல், ஒவ்வொரு முறை "post a comment" ஐ க்ளிக் செய்தாலும் IE crashed.
தேசிகன் பதிவில் சுட்டி கண்டும் மடல் கண்டும் தோ ஓடியாந்தேன் :-))
//எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்//
என்ன தமிழ்ச் சொல்லாட்சி பாருங்கள்!
பழுதாகலாம் தவறில்லை! ஆனால் பழுது பார்க்க வேண்டும்; பழுதுபோய் "ஒழிந்தன" என்கிறார்!
குடந்தை தலத்துக்கும்
"கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்" என்று அமைந்து விட்டது இறை அருள் தான்!
ஏன் என்றால் குடந்தை தலம் தான் நாம் எல்லாம் இன்று நாராயணா என்று கண்டு கொள்வதற்கு உதவிய தலம்.
ஆழ்வார் பாசுரம் என்ற ஒன்று இருக்கிறது; அதை எங்கு உள்ளது என்று தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று நாதமுனிகள் நினைத்தது இங்கு தான்; அதுவும் வழிப்போக்கும் அடியார் சிலர் பாடக் கேட்டு!
இப்படி நாம் கண்டு கொள்ள உதவிய குடந்தையில் ஆழ்வார் கண்டு கொண்டார் நாராயணா என்னும் நாமம்.
குடந்தை, தஞ்சை, திருப்பிரிதி (ஜோஷி மட்), திருவதரி (பத்ரிநாத்) என்ற திவ்ய தேச வைபவம் கொடுத்த நல்ல பதிவு பாலா!
நன்றி, கண்ணபிரான் !
திருமங்கை மன்னனின் பெரும்பாலான பாசுரங்களில் காணப்படும் ஒரு வகை வாத்சல்யம், வாசிப்பவரை கட்டுக்குள் வைத்திருக்க வல்லது என்பது என் கருத்து !!!
இவரைப் பற்றி நிறைய எழுதலாம், எழுத வேண்டும், பார்ப்போம் :)
அன்பின் குமரன், ராகவன்,
பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி !
Post a Comment